பத்மநாபபுரம் அரண்மனை பத்மநாபபுரம் என்னும் சிறிய கிராமத்தில் உள்ள ஒரு அரண்மனை ஆகும். இது கேரளாவின் திருவனந்தபுரம் நகரத்தில் இருந்து தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி நகரத்திற்குச் செல்லும் வழியில் பத்மனாபபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இந்த அரண்மனையைச் சுற்றி கிரானைட் கற்களால் ஆன கோட்டை அமைந்துள்ளது. இது மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
இந்த அரண்மனையானது 1601 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட இரவி வர்ம குலசேகர பெருமாள் என்பவரால் கட்டப்பட்டது. இந்த அரண்மனையானது கேரளக் கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அரண்மனை வளாகத்தில் உள்ள உப்பரிகை மாளிகைக்கு அருகே சரஸ்வதியம்மன் கோயில் உள்ளது.