தாணுமாலயன் கோயில் அமைந்துள்ள இடம் சுசீந்திரம் என அழைக்கப்படுகிறதுஅகலிகையால் ஏற்பட்ட தேவேந்திரனுடைய சாபம் நீங்க தேவேந்திரன் இத்தலத்துக்கு வந்து மும்மூர்த்திகளை ஒரே சமயத்தில் வழிபட்டு விமோசனம் பெற்ற தலம் இது. சுசீ என்றால் தூய்மை என்று பொருள். இந்திரன் இங்கு தூய்மை பெற்றதால் சுசீந்திரம் என அழைக்கப்படலாயிற்று. இக்கோயிலில் கலை வேலைப்பாடுகள் மிகுந்த சில மண்டபங்கள் உள்ளன. அவை;
1.   கலைநயத்துடனான சிற்பங்களுடன் கூடிய செண்பகராமன் மண்டபம்.
2.   இசைத்தூண்கள் கொண்ட குலசேகர மண்டபம்.
3.   திருக்கல்யாணம் நடக்கும் ஊஞ்சல் மண்டபம்.
4.   வேனிற்காலத்தில் மும்மூர்த்திகள் ஓய்வெடுக்கும் வசந்த மண்டபம்.
5.   பல இறையுருக்களின் சிற்பங்களைக்கொண்ட சித்திர சபை.
இங்கு தினசரி வழிபாடுகள் நடத்தப் பெற்றாலும் கீழ்க்காணும் விழாக்கள் இக்கோயிலில் மிகச் சிறப்பாக நடத்தப் பெறுகின்றன.
·         சித்திரை தெப்பத்திருவிழா - 1 நாள்
·         ஆவணி பெருநாள் திருவிழா - 9 நாள்
·         மார்கழி திருவாதிரை திருவிழா- 10 நாள்
·         மாசி திருக்கல்யாண திருவிழா - 9 நாள்
மேலக்கோபுர வாயிலுக்கு நிலத்தைத் தோண்டும்போது அனுமன் சிலை ஒன்று கிடைத்தது. 18 அடி உயரமுடைய இந்தச் சிலை 1929 ஆம் ஆண்டில் இராமபிரானின் கருவறைக்கு எதிரில் இருக்குமிடத்தில் நிறுவப்பட்டுள்ளது. இங்கு ஆஞ்சநேயர் வழிபாடு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
·         இக்கோயில் 5400 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.
·         இக்கோயிலின் அரச கோபுரத்தின் உயரம் நூற்று முப்பத்தி நாலரை அடி இருக்கிறது.
·         இக்கோயிலில் கணபதியைப் பெண்ணுருவில் செதுக்கியுள்ள சிற்பம் உள்ளது. இதைவிக்கினேசுவரிஎன அழைக்கிறார்கள்.
·         இக்கோயிலின் நவக்கிரகங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த நவக்கிரகங்களின் சிற்பங்கள் மேற்கூரையில் உள்ளன.