கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற திருத்தலம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். 'பெண்கள் இந்தக் கோயிலில் பொங்கலிட்டு வழிபட்டால் திருமணம் கைகூடும்; அனைத்து தோஷங்களும் நீங்கும்' என்பது ஐதீகம். கேரள மாநிலத்திலிருந்து ஏராளமான பெண்கள் 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி இந்தக் கோயிலுக்கு வருவதால், `பெண்களின் சபரிமலை' என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறது.

கோயில் வரலாறு:

பகவதி அம்மன் புற்றுவடிவில் சுயம்புவாகத் தோன்றிய சிறப்புடைய இந்தக் கோயிலில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளும்விதமாக, பல கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் உள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு முன் அடர்ந்த காடாக இருந்த இந்தப் பகுதியில், சுற்றுப்புற கிராமங்களிலுள்ள மக்கள் தங்கள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி வருவது வழக்கம். ஆட்டு மந்தைகளும் மாட்டு மந்தைகளும் இருந்ததால், 'மந்தைக்காடு' என்று அழைக்கப்பட்டு, நாளடைவில் 'மண்டைக்காடு' என்று மருவியதாகக் கூறுகின்றனர். இந்தப் பகுதியில்தான் பகவதி அம்மன் புற்று வடிவில்  பக்தர்களுக்குக் காட்சி தந்ததாகக் கூறுகிறார்கள்.
முற்காலத்தில் இந்தப் பகுதியைச் சேர்ந்த கிராமங்களில் காலரா, சின்னம்மை, பெரியம்மை போன்ற கொள்ளை நோய்கள் பரவின. நோயைக் குணப்படுத்த போதிய மருத்துவ வசதி இல்லாததால் மக்கள் கடும் துன்பத்துக்கு ஆட்பட்டனர். ஒரு கட்டத்தில் ஊரையே காலி செய்துவிட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டது. அவர்களின் துன்ப இருளைப் போக்கவந்த விடிவெள்ளியாக ஒரு சாது மண்டைக்காட்டுக்கு வந்தார். 63 கோணங்களுடன் ஒரு சக்கரம் வரைந்து, தினமும் பூஜை செய்தார். தம் தவ வலிமையால் மக்களின் நோய்களைத் தீர்த்து வைத்தார். திக்கற்ற தங்களுக்கு, சாதுவின் வடிவில் தெய்வமே துணை வந்ததாக எண்ணிய கிராம மக்கள், அவரை பக்தியுடன் வழிபட்டனர். நீண்டகாலம் அங்கே தங்கியிருந்த சாது, மக்களின் நோய்களைத் தீர்த்து வைத்ததுடன், சிறுவர்களை மகிழ்விக்க சித்து விளையாட்டுகளும் செய்து காட்டினார்.

ஸ்ரீசக்கரத்தில் வளர்ந்த புற்று:

சாது ஶ்ரீசக்கரம் வைத்து வழிபட்ட இடத்தில் ஒரு புற்று வளர்ந்திருந்தது. ஒருமுறை ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். புல்லை மேய்ந்துகொண்டிருந்த ஓர் ஆடு, அங்கு வளர்ந்திருந்த புற்றை மிதித்துவிட்டது. உடனே புற்றிலிருந்து ரத்தம் பீறிட்டது. அதிர்ந்துபோன சிறுவர்கள், புற்றை உதைத்ததால் ஆட்டின் காலில் அடிபட்டு ரத்தம் வந்திருக்குமோ என்று நினைத்து, ஆட்டின் காலைப் பார்த்தபோது, காயம் எதுவும்  இல்லை. புற்றிலிருந்துதான் ரத்தம் வருகிறது என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட சிறுவர்கள், ஊர்ப் பெரியவர்களிடம் சென்று கூறினார்கள். அவர்களும் புற்று இருந்த இடத்துக்கு வந்து, சிறுவர்கள் கூறியது உண்மைதான் என்பதைப் புரிந்துகொண்டார்கள். மேலும், ஏதேனும் தெய்வக் குற்றம் நிகழ்ந்துவிட்டதோ என்று அச்சப்பட்டார்கள். தகவல் அரசருக்கும் தெரிய வந்தது. பரிவாரங்களுடன் வந்து பார்த்த மன்னரும் அதிர்ச்சி அடைந்தார். அரண்மனை ஜோதிடர், ''அரசே, அச்சம் வேண்டாம். இந்த இடத்தில் ஏதோ ஒரு தெய்வசக்தி குடிகொண்டிருக்கிறது. மக்களின் பிணி தீர்க்க வந்த சாது, இந்த இடத்தில்தான் ஶ்ரீசக்கரம் வைத்து பூஜை செய்து வந்தார்'' என்று கூறினார். மறுநாள் காலையில் மேற்கொண்டு விசாரிக்கலாம் என்று முடிவு செய்த மன்னர் அரண்மனைக்குத் திரும்பினார்.

கனவில் தோன்றிய பகவதி அம்மன்:

அன்றிரவு, மன்னரின் கனவில், கோடி பௌர்ணமி நிலவின் பிரகாசத்துடன் காட்சி தந்த பகவதி அம்மன், ''குழந்தாய், அச்சம் வேண்டாம். இங்கு வாழும் மக்களின் துன்பங்களைப் போக்கி, அவர்களை சுபிட்சமாக வாழ வைக்கவே நான் இங்கே குடிகொண்டுள்ளேன். இன்று முதல் என்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்புரிவேன். நான் குடிகொண்டுள்ள புற்றிலிருந்து வடியும் ரத்தம் நிற்கவேண்டுமானால், புற்றில் களபம் (அரைத்த சந்தனம்) சாத்தி வழிபடவேண்டும்'' என்று கூறி மறைந்தார்.
கனவில் பகவதி அம்மனை தரிசித்த சிலிர்ப்புடன் உறக்கத்திலிருந்து விழித்த மன்னர், பக்திப் பரவசம் மேலிட்டவராக பொழுது விடிவதற்குக் காத்திருந்தார். மந்திரி பிரதானிகளையும் அரண்மனை ஜோதிடர்களையும் அழைத்துக்கொண்டு மண்டைக்காடு வந்து, புற்றின் முன்பு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். பின்னர், பகவதி அம்மன் கனவில் கூறியதுபோல், புற்றில் சந்தனம் சாத்தி வழிபட்டார்மன்னர் களபம் சார்த்தி வழிபட்டதும் புற்றில் ரத்தம் வடிவது நின்றது. பகவதி அம்மன் தன் கனவில் தோன்றியதையும், புற்றில் பகவதி தேவி குடியிருப்பதையும் மன்னர் மக்களுக்கு விளக்கிச் சொன்னார். இந்த இடம் புனிதத் தலம் என்றும். இங்கு தினமும் பூஜை மற்றும் வழிபாடு நடத்த வேண்டும் என்றும் மன்னர் உத்தரவிட்டார். அதன் பிறகு புற்றைச் சுற்றிலும் ஓலை வேயப்பட்டு நித்தமும் விளக்கேற்றி வழிபாடு நடத்தப்பட்டது.

சமாதியான சாது:

மக்களின் பிணி தீர்க்க வந்த கேரளத்து சாது, அம்மன் புற்றில் எழுந்தருளிய காட்சியைத் தரிசித்து உள்ளம் குளிர்ந்தார். மண்டைக்காட்டில் எழுந்தருளத் தன்னை ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொண்ட அம்மனின் கருணையை எண்ணி மெய்சிலிர்த்துப் போனார். தாம் வந்த வேலை முடிந்தது என்று நினைத்த சாது, தாம் சமாதியடைய திருவுளம் கொண்டார். மண்டைக்காடு  பகவதி அம்மன் கோயிலுக்கு எதிரே இடப் புறத்தில் ஆழமாக ஒரு குழி தோண்டினார். பின்னர், அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை அழைத்து, ''நான் இந்தக் குழியில் தியானம் செய்யப்போகிறேன். நான் தியானத்தில் ஆழ்ந்ததும், இந்தக் குழியை மண்ணால் மூடிவிட்டு மறுநாள் காலையில் வந்து பாருங்கள்'' என்று கூறினார்
ஏற்கெனவே பல சித்து விளையாட்டுகளைத் தங்களுக்குக் காட்டியவர் என்பதால், இதுவும் அவருடைய சித்து விளையாட்டுகளில் ஒன்றாக இருக்கலாம் என்று நினைத்த சிறுவர்கள், சாது கூறியபடியே, அவர் தியானத்தில் ஆழ்ந்ததும் மண்ணைக் கொட்டி குழியை நிரப்பினர். ஊருக்குத் திரும்பிய சிறுவர்கள் நடந்ததை ஊர்மக்களிடம் தெரிவித்தனர். மறுநாள் காலையில் ஊர்மக்கள் அனைவரும் அங்கே சென்றனர். சிறுவர்கள் சுட்டிக்காட்டிய இடத்தில் மண்ணைத் தோண்டிப் பார்த்தபோது, குழிக்குள் சாது தியானத்தில் ஆழ்ந்ததுபோல் இருந்தார். அவரிடம் எந்த ஒரு சலனமும் இல்லை. அவர் சமாதி அடைந்துவிட்டார் என்பதை உணர்ந்த மக்கள், தங்கள் பிணி தீர்க்கும் கற்பகத்தருவாக வந்த சாது, தங்களை விட்டுச் சென்றுவிட்ட துக்கம் தாங்காமல் கதறி அழுதனர். பின்னர், முன்போலவே மண்ணைக் கொட்டி, குழியை மூடிவிட்டு, கனத்த இதயத்துடன் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர். மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு எதிரில் இப்போது அமைந்திருக்கும் பைரவர் சந்நிதிதான், சாதுவின் சமாதி என்று கூறுகிறார்கள். மண்டைக்காடு பகவதிக்கும், பின்னர் சாதுவின் சமாதி பீடத்திலும் நைவேத்தியம் செய்கிறார்கள். இன்றைக்கும் இந்த நடைமுறை வழக்கத்திலுள்ளது.

இருமுடியும், கேரள பக்தர்களும்:

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு கேரளப் பெண்கள், இருமுடி கட்டி புனிதப் பயணம் வருவதன் பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி சொல்லப்படுகிறதுஓலைக்குடிசையாக இருந்த இந்தக் கோயில், கன்னியாகுமரி மாவட்டம் கேரள மாநிலத்தின் ஒரு அங்கமாக அப்போது இருந்தது. கொல்லம் உள்ளிட்ட இடங்களிலிருந்து வியாபாரிகள் மாட்டுவண்டியில் தேங்காய், புளி போன்ற பொருள்களை மண்டைக்காடு வழியாக கிழக்குப் பகுதிகளுக்கு விற்பனைக்குக் கொண்டுசெல்வது வழக்கம். ஒருநாள் கொல்லத்தைச் சேர்ந்த வியாபாரி, தன் வியாபாரத்தை முடித்துவிட்டு மாட்டுவண்டியில் மண்டைக்காடு வழியாக வந்துகொண்டிருந்தார். அப்போது சூரியன் அஸ்தமித்து இருள் சூழ்ந்தது. நீண்ட தூரப் பயணத்தால் களைப்படைந்த வியாபாரி, பக்கத்தில் உணவு விடுதி ஏதும் இருக்கிறதா எனத் தேடிப் பார்த்தார். மண்டைக்காடு கோயில் அருகில் வந்தவர், அங்குள்ள ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தவரைப் பார்த்து,  "பசி வயிற்றைக் கிள்ளுகிறது. இந்தப் பகுதியில் விடுதி ஏதாவது இருக்கிறதா?" என்று கேட்டார். கடவுள் நம்பிக்கை இல்லாத அந்த நபர், விளக்கொளியில் மிளிர்ந்த மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலைச் சுட்டிக்காட்டி, ``அதோ வெளிச்சம் தெரிகிறதே... அது விடுதிதான். நீ அங்கு சென்றால் உணவு கிடைக்கும்" என்று விளையாட்டாகச் சொன்னார். பசி மயக்கத்தில் இருந்த அந்த வியாபாரி, சற்றுத் தெம்பு வந்தவராகக் கோயிலை நோக்கிச் சென்றார். ஓலை வேயப்பட்ட கோயிலுக்கு முன்பு மாட்டு வண்டியை நிறுத்தியவர், கோயிலுக்குள் நுழைந்தார். அங்கு வியாபாரி எதிர்பார்த்தபடி கோயில் விடுதியாகக் காட்சியளித்தது.
அங்கு ஒரு மூதாட்டி இருந்தார்அவரிடம், ``பசிக்கிறது, சாப்பிட ஏதாவது கொடுங்கள்" என்று கேட்கவும், இலையில் அறுசுவை உணவைப் படைத்து வழங்கினார் அந்த மூதாட்டி. இதுவரை அவர் வாழ்வில் உண்டிராத சுவையுடன் அமிர்தம் போன்று இருந்தது அந்த உணவு. அத்துடன் நிற்காத மூதாட்டி வண்டியை இழுத்துவந்த காளை மாடுகளுக்குத் தண்ணீரும் தீவனமும் தயாராக இருப்பதாகக் கூறினார். காளை மாடுகளுக்கு உணவு கொடுத்த வியாபாரி, நள்ளிரவு ஆகிவிட்டதால் அங்கேயே தங்கினார். உண்ட மயக்கத்தில் கண்ணயர்ந்த கேரள வியாபாரி, காலையில் கண்விழித்துப் பார்த்தபோது, மூதாட்டி யாரும் அங்கு இல்லை. இரவு விடுதி என நினைத்து தங்கிய இடத்தில் கோயில் இருப்பதைக் கண்டார். இரவு நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்த அவருக்கு ஓர் உண்மை புலப்பட்டது. இரவு உணவளித்தது பகவதி அம்மன்தான் என்பதை உணர்ந்தார். நெஞ்சுருகி அம்மன் பாதத்தில் விழுந்து வணங்கினார். வியாபாரத்தின் மூலம் கிடைத்த பணத்தின் ஒரு பகுதியை துணியில் கட்டி கோயில் திருப்பணிக்கான காணிக்கையாக வைத்தார். பின்னர், தனது ஊரான கொல்லத்துக்குச் சென்று மண்டைக்காட்டில் நடந்த அதிசயத்தை மக்களிடம் சொன்னதுடன், அமுது படைத்த பகவதி அம்மனுக்கு பொங்கல் சமைத்து படையல் செய்வதற்காக, ஆண்டுதோறும் இருமுடி கட்டி மண்டைக்காட்டுக்கு வரத் தொடங்கினர். இருமுடியில் ஒருமுடியில் பொங்கலிடத் தேவையான பொருள்களும் மற்றொரு முடியில் பூஜைக்குத் தேவையான பொருள்களும் இருக்கும். 'அம்மே சரணம், தேவி சரணம், மண்டைக்காட்டம்மே சரணம்'; 'சரணம் தா தேவி, சரணம் தா தேவி பொன்னம்மே' என்று சரண கோஷம் ஒலிக்க, கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் இருமுடி சுமந்து பக்திப் பரவசத்துடன் மண்டைக்காட்டுக்கு ஆண்டுதோறும் வருகிறார்கள்.

சமத்துவத்தை வலியுறுத்தும் கோயில்:

சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் சாதி,மத பேதம் எதுவும் இல்லாமல் பக்தர்கள் சென்று வழிபட்டு வருகிறார்கள். சபரிமலை ஐயப்பன் கோயிலில் குறிப்பிட்ட வயதுக்கு மேல் உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதால், அதிகமான பெண்கள் விரதமிருந்து மண்டைக்காட்டுக்கு இருமுடி கட்டி புனிதப் பயணமாகச் சென்றுவருகிறார்கள். 
ஓலையால் வேயப்பட்ட மண்டைக்காடு கோயிலின் மேற்கூரையை அடிக்கடி மாற்றி அமைக்கவேண்டிய நிலை அப்போது இருந்தது. சுயம்புவாக மண்புற்றில் எழுந்தருளிய அம்மன் வளர்ந்துகொண்டே போனதுதான் அதற்குக் காரணம். மூலஸ்தானத்தில் அம்மன் தொடர்ந்து வளர்ந்து வந்ததால், மேற்கூரையை உயர்த்திக்கொண்டே செல்வது பக்தர்களுக்கு சிரமமாக இருந்தது. எனவே, இதுகுறித்து அம்மனிடம் நெஞ்சுருக பக்தர்கள் வேண்டினர். புற்றை ஒழுங்குபடுத்தி சந்தனம் சாத்தினால், ஒருநிலையில் நிற்பதாக அம்மனின் அருள்வாக்கு கிடைத்தது. இதையடுத்து அம்மன் முகம் வடக்குமுகமாக அமைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை சுத்தமான சந்தனத்தை புற்றுக்குள் நிறைக்கும் சடங்கு நடக்கிறது.

தேங்காயில் கொம்பு முளைத்த அதிசயம்:

மண்டைக்காடு பகவதி அம்மன் வீற்றிருக்கும் பகுதி தென்னை மரங்களால் சூழ்ந்திருக்கிறது. தென்னைமரத்தில் முதலில் கிடைக்கும் தேங்காயை மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு காணிக்கையாகச் செலுத்தும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்துவருகிறது. ஒருமுறை நிலக்கிழார் ஒருவர், பகவதி அம்மனுக்கு தேங்காய் அளிக்காமல் உதாசீனப்படுத்தியதால், அவருடைய தோப்பில் பறிக்கப்பட்ட அனைத்து தேங்காய்களிலும் கொம்பு முளைக்கத் தொடங்கியதாக செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. பின்னர், அம்மனின் அருளை உணர்ந்துகொண்ட நிலக்கிழார், கொம்புமுளைத்த தேங்காய்களை மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு காணிக்கையாகச் செலுத்தி தன் செயலுக்காக, மனமுருகி வேண்டிக்கொண்டாராம். அதன் பிறகுதான் அவர் தோப்பில் விளையும் தேங்காய்களில் கொம்பு முளைப்பது நின்றது. அம்மனின் இந்தத் திருவிளையாடலுக்கு சாட்சியாக மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் முன்பு அந்தக் கொம்பு முளைத்த தேங்காய்கள் கட்டப்பட்டுள்ளன. கொம்புடன் கூடிய தேங்காயை இன்றும் நாம் கண்கூடாகக் காணலாம்.

சிறப்புமிக்க ஒடுக்கு பூஜை

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு இருமுடி கட்டி புனிதப்பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள், தங்கள் முழு உருவத்தைத் துணியில் வரைந்து, கை, கால், கழுத்துப் பகுதிகளை அமைத்து தலைப்பகுதியில் கண், வாய், மூக்கு, காது எனப் பல வண்ணங்களில் அவர்கள் உயரத்துக்கு ஏற்ப அமைத்து அதைக் கொடியாக ஏந்தி 'சரணம்தா தேவி சரணம் தா தேவி பொன்னம்மே' எனக் கால்நடையாக மண்டைக்காடு வந்து அம்மனை தரிசிக்கிறார்கள். மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் அருகில் உள்ள கடல்தான் பக்தர்களின் புனிதத் தீர்த்தம். பக்தர்கள் முதலில் கடலுக்குச் சென்று நீராடிவிட்டு அல்லது கால் நனைத்துவிட்டோதான் பகவதி அம்மனை தரிசிக்கக் கோயிலுக்குள் வருவார்கள். கடற்கரைக்கு வரும் கேரள பக்தர்கள் `கடலம்மே' என பக்திப் பரவசத்துடன் அழைத்தவாறே தேங்காய் மற்றும் சில்லறைக் காசுகளை கடலில் வீசுவார்கள். பின்னர் தங்கள் இருமுடிக்கட்டுகளில் உள்ள பொருள்களைக்கொண்டு கோயில் சந்நிதியில் பொங்கலிட்டு அம்மனை வழிபடுகிறார்கள்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பத்து நாள்கள் கொடைவிழா நடக்கிறது. கடைசி செவ்வாய்கிழமை நிறைவுநாள் வருவதுபோல் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா, மார்ச் 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ம் நாள் விழாவான நேற்று நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை நடந்தது. பலவகை நைவேத்தியங்களை அம்மனுக்கு ஊட்டும் நிகழ்வுதான் இந்த ஒடுக்கு பூஜையாகும். மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு அருகே அமைந்துள்ள சாஸ்தா கோயிலில் நைவேத்தியங்கள் தயாரிக்கப்பட்டு 13 மண் பானைகள் மற்றும் ஓலைப் பெட்டிகளில் மேளதாளம் முழங்க அம்மன் சந்நிதிக்கு எடுத்துவரப்பட்டன. லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மன் சந்நிதியில் கூடியிருந்தனர். கொண்டுவரப்பட்ட நைவேத்தியங்கள் அனைத்தும் அம்மனுக்குப் படைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அம்மனுக்குப் படைக்கப்பட்ட நைவேத்தியங்கள் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டனமண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு நாமும் ஒருமுறை சென்று வழிபட்டு நலம் பெறுவோம்...!  

எப்படிச் செல்வது?:

நாகர்கோவிலிலிருந்து சுமார் 15 கி.மீ  தொலைவில் அமைந்திருக்கிறது மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். குளச்சலில் இருந்து மூன்று கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திங்கள் சந்தை சென்று அங்கிருந்தும் பேருந்தில் செல்லலாம். அதிகாலை 5 மணி முதல் மதியம் 12:30 மணிவரையும், மாலை 5 மணிமுதல் இரவு 7:30 மணிவரையும் கோயில் நடை திறந்திருக்கும். காலை 6 மணி, மதியம் 12:30 மணி, மாலை 6 மணி, இரவு 7:30 மணி ஆகிய நேரங்களில் தீபாராதனை நடைபெறும்.