விவேகானந்தர் பாறை என்பது கன்னியாகுமரிக் கடலில் அமைந்துள்ள ஒரு பாறையாகும். சுவாமி விவேகானந்தர்கன்னியாகுமரிக்கு வந்திருந்த போது கடலுக்குள் அமைந்திருக்கும் இந்தப் பாறைக்கு நீந்திச் சென்று, மூன்று நாட்கள் தியானம் செய்திருக்கின்றார். எனவே அவரது நினைவாக இந்தப் பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டு 1972 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.அதன் பிறகு இந்தப் பாறைக்கு விவேகானந்தர் பாறை என்ற பெயர் ஏற்பட்டது. இப்பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபமும் அம்மன் பாதக் கோயில் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளன. இதனருகிலுள்ள மற்றொரு பாறையில் உலகின் மிக உயரமான திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
விவேகானந்தர் தவம் செய்த இந்தப் பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இம்மண்டபத்தினுள் விவேகானந்தர் நின்ற நிலையிலான பெரிய வெண்கலைச் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ள பாறையின் கீழ் பகுதியில் ஒரு தியான மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.
கன்னியாகுமரிக் கடலின் கரையிலிருந்து விவேகானந்தர் பாறைக்கு தமிழ்நாடு அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் மூலம் படகுப் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் படகுப் போக்குவரத்துக்காக சாதாரணக் கட்டணம், சிறப்புக் கட்டணம் என இரண்டு வழிகளிலான கட்டணங்கள் உள்ளன. இரு வகையான கட்டணம் என்றாலும் பயணம் அனைவருக்கும் சமமாகத்தான் உள்ளது. சிறப்புக் கட்டணம் விரைவில் பயணிக்க உதவுகிறது.
0 Comments